< Back
மாநில செய்திகள்
அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 28-ந்தேதி ரெயில் மறியல்
கடலூர்
மாநில செய்திகள்

அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 28-ந்தேதி ரெயில் மறியல்

தினத்தந்தி
|
17 Jun 2022 12:19 AM IST

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 28-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சூரப்பநாயக்கன்சாவடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜேஷ்கண்ணன், குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மாணவரணி அமைப்பாளர் அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சுந்தரராஜன், மீனவர் விடுதலை வேங்கை மாநில நிர்வாகி வெங்கடேசன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்