ராகுல்காந்தி நடைபயணத்தால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - கே.எஸ்.அழகிரி
|ராகுல்காந்தி நடைபயணத்தால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சேலத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசினார். முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ராகுல்காந்தியின் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் பங்கேற்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில பொதுச்செயலாளர் கார்த்தி தங்கபாலு, முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
7-ந் தேதி தொடங்குகிறது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்குகிறார். அன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்துவதற்காக இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது.
ராகுல்காந்தி நடைபயணத்தால் மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு விரைவில் அமலாக்கத்துறை செல்லும் என்று கூறி இருந்தார். எதை வைத்து அவர் இப்படி கூறினார்? என்று தெரியவில்லை.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுவது தவறானது. பொதுக்கூட்டத்திற்கு தோழமை கட்சிகள் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. ஏனென்றால் இது காங்கிரஸ் கட்சி கூட்டம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தி மண்டபத்தில் தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் கொடுப்பதாக தான் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.-