கன்னியாகுமரியில் இருந்து இன்று 'இந்திய ஒற்றுமை பாதயாத்திரை' தொடங்குகிறார் ராகுல்காந்தி
|கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி இந்த நடைபயணத்தை இன்று தொடங்கிவைக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.
ராகுல்காந்தி பாதயாத்திரை
இதற்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது.
மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
3,570 கி.மீ.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி
பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விடுதியில் தங்கிய அவர், இன்று காலை 6 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் செல்கிறார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும் அங்கு நடைபெறும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் பொதுமக்களுடன் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் காலை 8 மணிக்கு மரக்கன்று நடுகிறார். பின்னர் ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜீவ்காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
அதனைத்தொடர்ந்து 8.10 மணிக்கு நினைவிட நுழைவு வாயில் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றுகிறார்.
ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்
பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு மூலம் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். 3.50 மணிக்கு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செய்கிறார். மாலை 4.10 மணிக்கு காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மாலை 4.30 மணி அளவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். அதை பெற்றுக்கொள்ளும் அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு (700 மீட்டர் தூரம்) மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பாதயாத்திரையின் நோக்கம் குறித்து எழுச்சி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு முடிந்ததும் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு செல்கிறார். இன்று இரவு அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கேரவனில் ஓய்வெடுக்கிறார். அவருடன் பாதயாத்திரை செல்லும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி கேரவன்களில் தங்குகிறார்கள். இதற்காக குளு, குளு வசதியுடன் சமையலறை, படுக்கையறை, சிறிய ஹால் வசதியுடன் கூடிய 60 கேரவன்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
10-ந்தேதி வரை...
நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த பாதயாத்திரை 10-ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. அதன்பின்னர் 10-ந்தேதி இரவு பாறசாலை அருகில் உள்ள செருவாரக்கோணம் சாமுவேல் எல்.எம்.எஸ். பள்ளியை சென்றடைகிறது. அங்கு ராகுல்காந்தி தங்குகிறார்.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது.
தினமும் 25 கி.மீ. நடக்கிறார்
தினமும் 20 முதல் 25 கி.மீ. தூரம் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்கிறார். அவருடன் 118 தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் ராகுல் உள்ளிட்ட 9 தலைவர்கள் 51-60 வயது வரையிலானவர்கள். 20 பேர் 25-30 வயது பிரிவினர். 51 பேர் 31-40 வயது பிரிவினர். 38 பேர் 41-50 வயது பிரிவினர். 11-ந்தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.
அங்கு 18 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். பின்னர் 30-ந்தேதி கர்நாடக மாநிலம் செல்லும் அவர் அங்கு 21 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். அதன்பிறகு வடமாநிலங்களுக்கு செல்கிறார்.
ஒரு கோடி பேரை சந்திக்கிறார்
கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூரு, பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைய உள்ளது.
குமரி மாவட்ட பாதயாத்திரையின்போது ராகுல்காந்தி சுமார் 1 லட்சம் பேரை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 150 நாள் பாதயாத்திரை மூலமாக ராகுல்காந்தி ஒரு கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
2,500 போலீசார்
பாதயாத்திரையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் குமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மேலும் பல்வேறு வெளிமாவட்ட போலீசாரும் குமரி மாவட்டத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர். ராகுல்காந்தி பாதயாத்திரை பாதுகாப்பு பணியில் சுமார் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வெடிகுண்டு சோதனை
வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் நேற்று கன்னியாகுமரியில் ராகுல்காந்தி மற்றும் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள், ராகுல்காந்தி வந்து செல்லும் இடங்கள் அனைத்திலும் மோப்பநாய் மூலமும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் வெடிகுண்டு சோதனை செய்தனர்.
ராகுல்காந்தி வரும் ஹெலிகாப்டர் வந்திறங்கும் ஹெலிபேடில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடந்து செல்லும் கடற்கரைச்சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு, போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.