< Back
மாநில செய்திகள்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் அறவழி போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் அறவழி போராட்டம்

தினத்தந்தி
|
27 March 2023 3:56 AM IST

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் அறவழி போராட்டம் நடத்தினார்கள்.

சத்தியாகிரக போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடு முழுவதும் அறவழி போராட்டங்களை நடத்தினர். சென்னையில் 7 இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தது.

சு.திருநாவுக்கரசர், கார்த்தி ப.சிதம்பரம்

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தனர். இதில் சு.திருநாவுக்கரசர் பேசும்போது, "ராகுல்காந்திக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி என்ன சதித்திட்டம் போட்டாலும் அதைக் காங்கிரஸ் கட்சி முறியடிக்கும். ராகுல்காந்திக்கு தற்போது ஏற்பட்டுள்ளது வீழ்ச்சி அல்ல, சறுக்கல் தான். அவர் மீண்டு எழுவார்" என்றார்.

கார்த்தி ப.சிதம்பரம் பேசுகையில், "இந்தியாவில் ஜனநாயகம் குறைந்து வருகிறது என்று வெளிநாட்டில் ராகுல்காந்தி பேசியது 100 சதவீதம் உண்மை ஆகும். அவர் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெல்வார்" என்றார்.

இந்தப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் துறைமுகம் ரவிராஜ் உள்பட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சைதாப்பேட்டை, அண்ணா ஆர்ச்

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச்செயலாளர் இல.பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் மன்சூர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே மத்தியசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் பங்கேற்று பேசினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி அருகே காந்தி சிலை முன்பு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொதுச்செயலாளர் ஆர்.தாமோதரன், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் அனுசியா டெய்சி, பேச்சாளர் சூளை ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காந்தி சிலை அருகே...

சென்னை போரூரில் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை காந்தி சிலை அருகே வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையிலும், பெரம்பூர் மார்க்கெட் அருகே வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு தலைமையிலும் போராட்டம் நடந்தது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த அறவழி போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

மேலும் செய்திகள்