< Back
மாநில செய்திகள்
சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் - அண்ணாமலை பேட்டி
மாநில செய்திகள்

சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் - அண்ணாமலை பேட்டி

தினத்தந்தி
|
24 March 2023 2:50 PM IST

சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என்று மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம்.

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்