டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி
|ஊட்டி செல்வதற்காக ராகுல் காந்தி இன்று காலை கோவை விமான நிலையம் வந்தார்.
கோவை,
அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார். நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார்.
இந்த நிலையில் அவர் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் செல்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து காலை 9.35 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி ஊட்டி புறப்பட்டு சென்றார். ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் அதேவிடுதியில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்து கேட்டு அறிந்து கொள்கிறார். இதையடுத்து மதிய உணவை முடித்த பின்பு 1 மணியளவில் ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அந்த மக்களிடம் கலந்துரையாடுகிறார். மேலும் அவர்களது கோவிலையும் பார்வையிடுகிறார்.
இதன்பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார். முன்னதாக வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தி வருகையையொட்டி தனியார் தங்கும் விடுதி, முத்தநாடுமந்து கிராமத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.