திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா
|திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராகு-கேது பெயர்ச்சி விழா
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் சென்றனர். இதனையடுத்து ராகு-கேது பரிகாரத்தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் நேற்று ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இதையொட்டி ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கீழப்பெரும்பள்ளம்
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.
கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு நேற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர். கேது பெயர்ச்சி நாளில் இருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.