திருச்சி
ராகிங் செய்யப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் மருத்துவமனையில் அனுமதி
|ராகிங் செய்யப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமயபுரம்:
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் சிதம்பரத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் அஜித் (வயது 18) என்பவர் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் கொணலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர், அஜித்தை ராகிங் செய்துள்ளார். இதில் அவரது கழுத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் இடுப்பு பகுதியிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அஜித் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.