< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு..!! - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு..!! - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
18 Jun 2022 12:37 PM IST

நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி (கேழ்வரகு), அரிசிக்கு பதிலாக வழங்க பரீட்சார்த்தமான முறையில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு , அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி ரேஷன்கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "2018-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொள்முதல் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதற்காக, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.

ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும். அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பில்லை. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.

நிர்வாக ஒப்புதல் அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்றுக்கொண்டு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில், அரிசிக்கு பதிலாக மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்