அரியலூர்
ராகிங் செய்பவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்; நீதிபதி பேச்சு
|ராகிங் செய்பவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நீதிபதி கூறினார்.
கேலிவதை தடுப்பு சட்டம்
அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு சட்ட உதவி மற்றும் கேலிவதை (ராகிங்) தடுப்பு சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்ேபாது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் தான் கேலி வதை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுவும் முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் நாவரசு என்பவரின் கொலை வழக்கு இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனவே மாணவ, மாணவிகள் தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுடன் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.
சட்ட உதவி முகாம்
மேலும் கேலிவதை(ராகிங்) செய்வது தெரியவந்தால் அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அனைத்து மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரிகள் போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளில் சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் முகாமில் முதுநிலை குடிமையியல் டாக்டர் கண்மணி வரவேற்று பேசினார். மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சிவா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் குழந்தைவேலு ஆகியோர் பேசினர். வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறையின் சட்ட ஆலோசகர் பகுத்தறிவாளன் மற்றும் வக்கீல் சவரி ஆனந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.