சென்னை
மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
|சென்னை சவுகார்பேட்டையில் மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் தலை மற்றும் மார்பில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அவருடைய நண்பர் சீனிவாசன் பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நேற்று முன்தினம் பூக்கடையில் நடந்த சவ ஊர்வலத்தில் ரவி தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்கள் ரவியிடம் மீண்டும் மதுபானம் கேட்டு தகராறு செய்தனர். ஆனால் அவர் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், ரவியை கத்தி மற்றும் பாட்டிலால் குத்திக்கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவியின் நண்பர்களான சவுகார்பேட்டை முருகப்பன் தெருவைச் சேர்ந்த தீனா (23) மற்றும் மணலி தாமரை குளம் பகுதியைச் சேர்ந்த திலிப்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.