திருவள்ளூர்
குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன்
|குடிப்பதை தட்டிக் கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் ஆவாரம் பூ தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 50). இவரது கணவர் சேகர் இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜேஷ் (31) ரஞ்சித் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராஜேஷுக்கு திருமணமாகி கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் ராஜேஷ் குடி பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து விட்டு அடிக்கடி தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மஞ்சுளாவின் இளைய மகன் ரஞ்சித் அண்ணன்- தம்பிக்கு இடையேயான பிரச்சினை காரணமாக அதே பகுதியில் உள்ள பவளமல்லி தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாததால் மஞ்சுளா கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் போதையில் இருந்த ராஜேஷிடம் மஞ்சுளா வேலைக்கு போய் சம்பாதிக்கிறதை எல்லாம் குடித்துவிட்டு இப்படி இருக்கிறாயே என்று தட்டிக்கேட்டார். இதனால் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜேஷ் ஒரு கட்டத்தில் தாயை கடுமையாக தாக்கினார். இதனால் தாய் மஞ்சுளா வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்து வலியால் கத்தினார்.
வெளியில் நின்று கொண்டு கத்தி என்னை அசிங்கப்படுத்துகிறாயே என்று கூறி ராஜேஷ் தனது தாயை கழுத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று கதவை பூட்டி உருட்டு கட்டையால் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கினார்.
பின்னர் கதவை பூட்டி விட்டு ராஜேஷ் வெளியே சென்றார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து போதை தெளிந்து ராஜேஷ் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தாய் மஞ்சுளா கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ராஜேஷின் தம்பி ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து தாயை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மஞ்சுளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலகாசன் தாயை அடித்து கொன்ற ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் அவரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.