சென்னை
பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்: கல்லூரி மாணவி முகத்தில் கத்தியால் வெட்டு - முன்னாள் காதலன் கைது
|பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவி முகத்தில் கத்தியால் வெட்டிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மயிலாப்பூரை சேர்ந்த 21 வயதுடைய மாணவி, பள்ளியில் படிக்கும்போது ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை காதலித்துள்ளார். இருவரும் தொடர்ந்து காதலை வளர்த்து வந்துள்ளனர். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து கண்டித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி கடந்த 2 மாதமாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரசாந்த், மாணவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கூறி தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து மாணவி முகத்தில் கீறிவிட்டு தப்பி சென்றார்.
இதில் ரத்த காயமடைந்த மாணவி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீஸ்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரசாந்த் போலீஸ்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.