தாயை அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையின் 2-வது மனைவியை குத்திக்கொன்ற மகன்
|சிறுவனின் தந்தை அடிக்கடி முதல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மீன் வியாபாரிக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார். அவன், தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறான். கனகா (வயது35) என்பவரை சிறுவனின் தந்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சிறுவனின் தந்தை அடிக்கடி தனது முதல் மனைவி மற்றும் சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுவன், தனது சித்தி கனகாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கனகாவின் வீட்டிற்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு கனகா தூங்கிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த சிறுவன் கனகாவை எழுப்பி உங்களால் தான் எனது தாய் மிகவும் கஷ்டப்படுகிறார். எனது தந்தையும் எங்களை அடிக்கிறார் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், அந்த வீ்ட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கனகாவை சரமாரியாக குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த கனகா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த சிறுவன் வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு வாசலில் நின்ற காரில் படுத்து தூங்கினான்.
சிறுவனின் தந்தை இரவு 12 மணியளவில் கனகா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. வீட்டின் வாசலில் நின்ற காரில் தனது மகன் ரத்தக்கரையுடன் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கனகா பிணமாக கிடந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கனகாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சித்தியை கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். சித்தியை கொலை செய்து விட்டு வீட்டின் அருகே தூங்கிய 16 வயது சிறுவன் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.