< Back
மாநில செய்திகள்
ஹாரன் அடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை இழுத்து சென்ற டிரைவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஹாரன் அடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை இழுத்து சென்ற டிரைவர் கைது

தினத்தந்தி
|
23 Sept 2023 11:41 AM IST

வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை இழுத்து சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் ஜீவா (வயது 34). நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம்- வீராணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெண் போலீஸ் ஜீவா, அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது. இந்த வேனை மானாம்பதியை சேர்ந்த டிரைவர் பெருமாள் ஓட்டினார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த வேன் டிரைவர் பெருமாள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்தார். பெண் போலீஸ் ஜீவா, வேன் டிரைவரிடம் தட்டிக்கேட்டார்.

இருப்பினும் வேன் டிரைவர் பெருமாள் தொடர்ந்து ஹாரன் அடித்தார். அதை பெண் போலீஸ் ஜீவா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேன் டிரைவர் பெருமாள், பெண் போலீஸ் ஜீவா மீது மோதுவது போல வேனை ஓட்டி அவர் மீது உரசியபடி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் ஜீவா, வேனுக்குள் ஏற முயன்றார். வேனின் படிக்கட்டில் தொங்கிய நிலையில் இருந்தபோது டிரைவர் பெருமாள் வேனை நிறுத்தாமல் பெண் போலீஸ் ஜீவாவை இழுத்து சென்றார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வேனின் குறுக்கே நிறுத்தி பெண் போலீஸ் ஜீவாவை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கேளம்பாக்கம் போலீசார், காயம் அடைந்த பெண் போலீஸ் ஜீவாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பெருமாளை கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்