< Back
மாநில செய்திகள்
வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்...
மாநில செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்...

தினத்தந்தி
|
1 Feb 2024 11:43 AM IST

சதீஷ்குமார் கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூரை சேர்ந்தவர் மாதவன் (வயது 61). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மாதவன் தனது 2-வது மகன் சரவணனுடன் வீட்டின் அருகிலேயே சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவரது 3-வது மகன் சதீஷ்குமார் (27). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் அவர் வீட்டில் இருந்து வந்தார். நேற்று சதீஷ்குமார் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தந்தை மாதவன், வேலைக்கு செல்லாமல் இப்படி வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருக்கிறாய் என்று திட்டி விட்டு, டி.வி.யை ஆப் செய்துவிட்டு சென்று விட்டார்.

இதையடுத்து மாதவன் கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ஆத்திரமடைந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மாதவனிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாதவனின் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

இதைப்பார்த்த சாலையில் சென்றவர்கள் கூச்சலிட்டு சாலையில் கிடந்த கற்களை எடுத்து சதீஷ்குமார் மீது வீசினர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மாதவன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அங்கு வந்த மாதவனின் மனைவி, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அங்கிருந்த சதீஷ்குமார் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து அப்பகுதியினர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று சதீஷ்குமாரை கைது செய்தனர்.

இதையடுத்து இலுப்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு காயத்ரி சம்பவ இடத்திற்கு சென்று மாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை என்ஜினீயர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்