சென்னை
கார் மீது மதுபாட்டில்கள் வீசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: போலீஸ் ஏட்டை கல்லால் தாக்கிய வாலிபர்கள்
|கார் மீது மதுபாட்டில்கள் வீசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் போலீஸ் ஏட்டை கல்லால் தாக்கிய வாலிபர்களை கைது செய்தனர்.
திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டான இவர், சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் இருந்த ஏட்டு செந்தில், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தோடு காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
பின்னர் தனது வீட்டின் அருகே காரை நிறுத்த சென்றபோது அங்கு குடிபோதையில் இருந்த 4 வாலிபர்களை, அங்கிருந்த கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது போதையில் இருந்த வாலிபர்கள், ஏட்டு கார் மீது காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனை ஏட்டு தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள், போலீஸ் ஏட்டு செந்தில்குமாரை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஏட்டு செந்தில்குமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஏட்டை கல் வீசி தாக்கிய திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த ஜோசப் (26), தங்கவேல் (29), பிரபு என்ற மணி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டேவிட் என்பவரை தேடி வருகின்றனர்.