சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்: மருத்துவக் கல்லூரி மாணவரை கடத்திய ரவுடிகள்
|சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, ஏமாற்றிய மருத்துவக் கல்லூரி மாணவரை ரவுடி கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
'ஜிகர்தண்டா' பட பாணியில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, ரவுடியை ஏமாற்றிய மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரை ரவுடி கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் நவீன்குமார். பல் மருத்துவ கல்லூரி மாணவரான இவர், யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வரும் நிலையில், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற ரவுடியுடன் நவீன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் பாடிபில்டர் போல் இருந்ததால், அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறிய நவீன்குமார், கோபிநாத் மற்றும் அவரது நண்பரிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கோபிநாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து நவீன்குமாரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நவீன்குமாரின் தாயாரை செல்போனில் அழைத்த ரவுடி கும்பல் பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனிடையே போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கோபிநாத், நவீன்குமாருடன் சேர்ந்து சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் சரணடைந்தார். கோபிநாத் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.