< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கல்யாண ராமசாமி கோவிலில் தெப்ப திருவிழா

தினத்தந்தி
|
30 July 2023 6:30 PM GMT

கல்யாண ராமசாமி கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

தெப்ப திருவிழா

மீமிசலில் பிரசித்தி பெற்ற கல்யாண ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி மாத உற்சவ திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா தீர்த்தாண்டதானம், சுந்தரபாண்டியபட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் தங்களது நாட்டுப்படகை மீமிசல் கல்யாண ராமசுவாமி குளத்திற்கு கொண்டு வந்து 4 படகுகளை ஒன்றாக இணைத்து அதன் மேல் அலங்கரிக்கப்பட்ட தளத்தில் கல்யாண ராமசாமி, லட்சுமணர், சீதை ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகள் குளத்ைத நான்கு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முத்துமாரியம்மன் கோவில்

அறந்தாங்கி அருகே இடையன்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் அம்பாள் வீதியுலா வந்தார். இதையடுத்து, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி, பால் காவடி, பறவை காவடி எடுத்தும், குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், சடல் காவடி எடுத்து பக்தர்கள் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இடையன்கோட்டை, சீனமங்கலம், திட்டக்குடி, வீரராகவபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

கஞ்சி கலைய ஊர்வலம்

ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை வேண்டியும், உலக நலன் வேண்டியும் கஞ்சி கலைய ஊர்வலம் நடைபெற்றது. இதில், பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் செவ்வாடை அணிந்து கலந்து கொண்டு பாண்டிபத்திரம் முத்துமாரி அம்மன் கோவிலில் இருந்து கஞ்சிக்கலையத்தை தலையில் சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பாண்டிபத்திரம் ஆதிபராசக்தி மன்றத்தை அடைந்தனர். பின்னர் அங்கு கஞ்சி வார்ப்பு செய்து பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

குத்து விளக்கு பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு கிராமத்தில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க 1,501 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர். முன்னதாக சூலப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வார்பட்டு, மேலைச்சிவபுரி, செல்லியம்பட்டி, பிரான்மலை, பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்