< Back
மாநில செய்திகள்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்
மாநில செய்திகள்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்

தினத்தந்தி
|
16 May 2024 4:13 PM IST

தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறாக பேசியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க. மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியது.

எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 64 நாட்கள் சிறையில் இருந்த அவர், அதன் பின் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் அவர் தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்.

சமீபத்தில் தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து அவதூறாக பேசியது இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பு தங்களது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவதூறாக பேசிய விவகாரத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்