சிவகங்கை
மாநில வினாடி-வினா போட்டிக்கு சிவகங்கை மாவட்ட பள்ளிகள் தேர்வு
|மாநில வினாடி-வினா போட்டிக்கு சிவகங்கை மாவட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டிகளில் வென்றவர்களுக்கான தெற்கு மண்டல அளவிலான போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சிவகங்கை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட தமிழ்வழி உயர்நிலை பிரிவில் சகாயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சூசையப்பர்பட்டணம் மகாலட்சுமி, ரீனா பிர்சிலா, பிரபாவதி முதலிடத்தையும், தமிழ்வழி மேல்நிலை பிரிவில் தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை சரவணக்குமார், விஷால், அன்புசெல்வன் முதலிடத்தையும், ஆங்கிலவழி இளநிலை பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி இலுப்பைகுடி செல்வி, முகேஷ்ராகவன், வினேயநிலா முதல் இடத்தையும், ஆங்கில வழி உயர்நிலை பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி காளையார்கோவில் நிதீஸ்வரன், சஞ்சய், ஹேமலதா இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வருகிற 3-ந் தேதி கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த மாணவர்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், முத்துசாமி, வடிவேல் மற்றும் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி விழா ஏற்பாட்டினை செய்திருந்தார். அறிவியல் இயக்க தலைவர் கோபிநாத், பொருளாளர் ரகுநாதன், சிவகங்கை கிளை செயலாளர் அனந்த கிருஷ்ணன், ஆசிரியர்கள் பிரான்சிஸ் சேவியர், ஜெயபாலன், ஜோஸ்பின் நித்தியா, அனிதா, ஆரோக்கிய அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.