கள்ளக்குறிச்சி
பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
|பொதுமக்கள் அளிக்கும் புகாா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகள் பற்றியும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் பற்றியும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோந்து பணி
அதேபோல் சாராயம், மதுவிற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.
இது தவிர புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மிக கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.