< Back
மாநில செய்திகள்
புட்லூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே மேம்பாலம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

புட்லூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே மேம்பாலம்

தினத்தந்தி
|
28 Oct 2022 8:05 PM IST

புட்லூரில் ரூ.18 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெயில்வே கேட்

சென்னை திருத்தணி ரெயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. புட்லூரின் மறுபுறத்தில் இருந்து, காக்களூர் வருவதற்கு ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் வழியாக தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், வேலை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடந்து செல்கின்றனர். ஆனால், ரெயில் தண்டவாளம் வழியாக, தினமும் 200-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை மற்றும் விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கோரிக்கை

இதனால் நீண்ட நேரம் இந்த ரெயில்வே கேட் மூடப்படும். இந்த நேரத்தில் அவசர பணிக்கும், மருத்துவ தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து புட்லூர் ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேம்பாலம் தயார்

இதனை தொடர்ந்து ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் காக்களூர்- புட்லூரை இணைக்கும் வகையில் ரூ.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினர். அதன்படி 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டும் பணி நிறைவடைந்து தற்போது சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'தற்போது மேம்பால பகுதியில் சாலை மற்றும் மேம்பால நுழைவு பகுதியில் தூண்கள் மற்றும் மேம்பாலம் இரு பகுதிகளிலும் தார் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. பணிகளை விரைவாக முடித்து இன்னும் ஒரு மாதத்தில் திறப்பு விழா நடத்தி போக்குவரத்து தொடங்கப்படும்' என கூறினார்.

மேலும் செய்திகள்