கள்ளக்குறிச்சி
உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்
|திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நேற்று சாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புஷ்பயாகம், சப்தாவரணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இரவு சீதாலட்சுமணன் அனுமந்த சமேத ஸ்ரீ ராமபிரான் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) பிரம்மோற்சவ நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான ஏஜென்டு கோலாகலன் என்ற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.