< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: போலீசார்-விவசாய தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு
மாநில செய்திகள்

மயிலாடுதுறை: போலீசார்-விவசாய தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு

தினத்தந்தி
|
28 Jun 2022 4:15 AM IST

நேரடி நெல் விதைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்த போது போலீசார்-விவசாய தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

மயிலாடுதுறை,

போலீசார்-விவசாய தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.குத்தாலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் 100 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இங்கு நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேரடி நெல் விதைப்பு முறையால் நாற்று பறித்தல், நாற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லுதல், நடவு பணி போன்ற பணிகள் நடைபெறாததால் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி நேரடி நெல் விதைப்பு முறைக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேரடி நெல் விதைப்புக்கு விவசாய கூலித்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேரடி நெல்விதைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மேலபருத்திக்குடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வயலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், சுவாமிநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணிகள் தொடங்கியது.இது குறித்து தகவல் அறிந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அங்கு சென்று நேரடி நெல் விதைப்பு முறை பணிகளை தடுத்தனர்.

இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டு அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.இந்த தள்ளு-முள்ளு சம்பவத்தின்போது மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நேரடிநெல் விதைப்பு செய்யப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை, திருக்கடையூர், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் குத்தாலம் ஒன்றியம் பருத்திக்குடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி தலைவர்களையும், விவசாய கூலி தொழிலாளிகளையும் கைது செய்த போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்