திருநெல்வேலி
போலீசாருக்கும் - மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
'தமிழன்டா' இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் தலைமையில் அருணா பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாரிசங்கர் உள்ளிட்டோர் மனு கொடுக்க வந்தனர்.
தள்ளுமுள்ளு
அப்போது அவர்கள் கையில் கொண்டு வந்திருந்த பேனரை விரித்து கோரிக்கையை வலியுறுத்த முயற்சி செய்தனர். இதைக்கண்ட போலீசார் அவர்களது செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில், பேனரை பறிக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், அதை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த வந்தவர்களில் 5 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச்சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.
பாதுகாக்க வேண்டும்
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் விரைந்து வந்தார். அவர் வேனில் ஏற்றிய 5 பேரையும் கீழே இறக்கி விடுமாறு கூறினார். இதையடுத்து அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'தமிழர் பண்பாடு நலிவடைந்து வருகிறது. கேரளா செண்டை மேளம், ராஜஸ்தான் நாசிக் டோல் போன்றவற்றின் தாக்கம் காரணமாக தமிழர் பண்பாடு நலிவடைந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர் கலைகளை பாதுகாக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
3 குழந்தைகளின் தாய்
தெற்கு வேப்பிலான்குளத்தை சேர்ந்த நல்லக்கண் மனைவி பார்வதி (வயது 32). இவர் 3 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அதில், "என்னுடைய கணவர் நல்லகண்ணு கடந்த 2021-ம் ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். அதனால் கூலி வேலைக்கு சென்று 3 குழந்தைகளை வளர்த்து வருகிறேன். கணவரின் விபத்து இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலையை கருதி சத்துணவு துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
விழிப்புணர்வு வாகனம்
கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் எடை குறைந்த நிலையில் உள்ள 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பேருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.2.72 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் பச்சையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான டிராக்டர் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, பயிற்சி உதவி கலெக்டர் ஷீஜா, சமூகநல அலுவலர் தனலட்சுமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.