< Back
மாநில செய்திகள்
பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

திருவெண்காடு:

கிராம சபை கூட்டம்

திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்.பி., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

மகளிர் உரிமை தொகை திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமங்கள் தோறும் மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமை தொகை திட்டம் இந்திய அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திருவெண்காடு ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெருந்தோட்டம் ஏரியின் மூலம் அதிக அளவில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரியை முற்றிலும் தூர்வாரி மேம்படுத்தி பறவைகள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்

திருவெண்காடு சுகாதார நிலையம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட சுகாதாரத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 100 நாட்கள் பணிகள் வழங்கப்படுகின்றன. இந்த பணி நாட்களை கூடுதலாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

கோரிக்கை மனுக்கள்

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், உதவி பொறியாளர் தெய்வானை, ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி, ஊராட்சித் துணைத் தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள், கிராம பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை கோரிக்கை மனுக்களாக அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் வழங்கினர். முடிவில் ஊராட்சி செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்