ராமநாதபுரம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை- பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
|புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
முதுகுளத்தூர்
புரட்டாசி கடைசி சனி
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ராமர் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் முதுகுளத்தூர் அடுத்த ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் உள்ள சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல வகை மலர்களால் பெருமாளுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.
சிறப்பு பூஜையில் ஆதங்கொத்தங்குடி ஊராட்சி தலைவர் கதிரேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ஆதி ஜெகநாதர் பெருமாள், பத்மாசனி தாயார், பட்டாபிஷேக ராமர், சந்தான கிருஷ்ணனுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிறப்பு பூஜை
ராமேசுவரம் கோவிலில் ராமபிரான் தங்க கருட வாகனத்தில் கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர் மீண்டும் தங்க கருட வாகனத்தில் ராமபிரான் கோவிலுக்கு வந்தடைந்தார்.
அதேபோல் திருவாடானை, தொண்டி பகுதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கட்டவிளாகம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பக்தர்கள் தரிசனம்
பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள்கோவில், தொண்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவில், புலியூர் ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், திருவாடானை ஜெய வீரஆஞ்சநேயர் கோவில், மண்டல கோட்டை செங்கமல தாயார் சமேத பிருந்தாவனநாதபெருமாள் கோவில், கீழக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில், கோடனூர் கரியமாணிக்கபெருமாள் கோவில், முகில்தகம் சொர்ண வருஷம் பெய்தபெருமாள், குளத்தூர் குலசேகரகபெருமாள் கோவில், கீழ்குடி சிவ சூர்யா நாராயண பெருமாள் கோவில், கள்ளவழியேந்தல் பிருந்தாவனநாத பெருமாள்கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.