துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து -ஐகோர்ட்டு தீர்ப்பு
|அரிசி மூட்டைகளை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட துறை ரீதியான தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு காவல்துறையில் 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், கடந்த 2009-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை மறித்து, 690 ரூபாயும், 2 அரிசி மூட்டைகளையும் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து நடந்த துறை ரீதியான விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனையாக ஒரு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால், 2011-12 ஆண்டுக்கான துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு பட்டியலில் இவரது பெயர் சேர்கப்படவில்லை.
பதவி உயர்வு
இதன்பின்னர், 2012-2013-ம் ஆண்டுக்கான பட்டியலில் இவரது பெயர் சேர்கப்பட்டு, 2014-ம் ஆண்டு துணை சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இதன் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த தண்டனையால் ஜூனியர்கள் தனக்கு முன்பு பதவி உயர்வு பெற்று விட்டனர் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
விசாரணை இல்லை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரியா ரவி, "மனுதாரர் லஞ்சமாக பணமும், அரிசி மூட்டைகளையும் போலீஸ்காரர் மூலமாக பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த போலீஸ்காரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் லாரி டிரைவர் ராமுவிடமும் விசாரிக்கவில்லை'' என்று வாதிட்டார்.
ஊதிய உயர்வு
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "எதிர்மனுதாரர் வெங்கடேசனின் ஒரு ஊதிய உயர்வை ரத்து செய்த உத்தரவை நாங்கள் ரத்து செய்கிறோம். 2011-12-ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் அவரது பெயரை சேர்த்து, அன்றில் இருந்து பதவி உயர்வு வழங்கி, அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்க வேண்டும். 2012-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு பாக்கி தொகையையும், ஊதிய உயர்வின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகையை அதிகரித்தும் வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தனர்.