< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி நவீன இறைச்சி கூடத்தில் தீ விபத்து
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி நவீன இறைச்சி கூடத்தில் தீ விபத்து

தினத்தந்தி
|
7 Aug 2023 10:06 AM IST

புளியந்தோப்பில் உள்ள ஆட்டுத்தொட்டி நவீன இறைச்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணிநேரம் போராடி அணைத்தனர்.

ஆட்டுத்தொட்டி இறைச்சி கூடம்

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் ஆட்டுத்தொட்டி எனப்படும் ஆடு மற்றும் மாடுகளை இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்யும் மாபெரும் நவீன இறைச்சி கூடம் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் இந்த இறைச்சி கூடம் 2009-ல் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த இறைச்சி கூடத்தில் ஒரு மணி நேரத்தில் 250 ஆடு மற்றும் 60 மாடுகள் அறுக்கப்பட்டு அந்த இறைச்சி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த நவீன இறைச்சி கூடத்தால் ஏற்கனவே அங்கு வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தனர். அதை தொடர்ந்து இந்த நவீன இறைச்சி கூடம் 2012-ம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது.

தீ விபத்து

தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த இறைச்சி கூடத்தில் ஆடு, மாடுகளுக்கு தேவையான வைக்கோல் மற்றும் அரைக்கப்பட்ட தானிய உணவுகள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் இந்த நவீன இறைச்சி கூடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென இறைச்சி கூடம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. வானத்தை நோக்கி பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த கூடம் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து பத்திரமான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

5 மணிநேர போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்ததும் வியாசர்பாடி, செம்பியம், எஸ்.எம்.நகர், எஸ்பிளனேடு ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களும், 15 தண்ணீர் லாரிகளும் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ஒரு மாடு தீக்காயத்துடன் மீட்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

இது குறித்து தகவல் அறிந்ததும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், வட்டார துணை கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான், திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன், தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

மின் இணைப்பு இல்லாத இந்த கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்