கரூர்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: இன்று நடக்கிறது
|வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்று சிறப்புடைய புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து புனித தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
யாகசாலை பூஜை
தொடர்ந்து அனைத்து கோபுரங்களுக்கும் கண் திறப்பு மற்றும் கலசம் வைத்தல், மூலஸ்தானம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் எண்வகை அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
இதில் மின்சாரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, இளங்கோ எம்.எல்.ஏ., புகழூர் நகராட்சித்தலைவரும், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பணி குழுத்தலைவருமான சேகர் என்கிற குணசேகரன், திருப்பணி குழுவினர், முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று கும்பாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மேல் திருமுறை பாராயணம், விநாயகர் வழிபாடு, 4-ம் கால யாக சாலை பூஜையும், தொடர்ந்து நாடீசந்தனம், மங்கள மகா பூர்ணாகுதி அதனைத் தொடர்ந்து தீபாராணையும், யாத்திரா தரிசனம், ஆறுமுகனின் அருள் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மேல் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், 10.15 மணிக்குள் மூலஸ்தானம் பாலசுப்ரமணியசுவாமி மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நீராட்டு நடைபெறுகிறது. பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம், பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
அன்னதானம்
கும்பாபிஷேக விழாவிற்கு 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் அன்னதானம் சாப்பிடும் வகையில் 300 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட பெரிய அன்னதானம் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.