விழுப்புரம்
தீர்க்க முடியாத 10 பிரச்சினைகளை கலெக்டரிடம் மனுவாக அளித்த புகழேந்தி எம்.எல்.ஏ.
|விக்கிரவாண்டி தொகுதியில் தீர்க்க முடியாத 10 பிரச்சினைகளை கலெக்டரிடம் மனுவாக புகழேந்தி எம்.எல்.ஏ. அளித்தார்.
விழுப்புரம்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வழங்க வேண்டுமென தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து, தனது தொகுதியில் தீர்க்க முடியாத 10 பிரச்சினைகள் குறித்த மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
அன்னியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்தல், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்துதல், விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள மயானத்தில் மின் மயானம் அமைத்தல், வாதானூரான் வாய்க்காலில் 13 கி.மீ. உள்ள கரையை மேம்படுத்துதல், வாக்கூர் ஊராட்சி மேல்பாதி பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்க வேண்டும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும், திருவாமாத்தூர், கல்பட்டு ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், கல்பட்டு நத்தமேடு ஏரிக்கரை சாலை இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து சாலையை அகலப்படுத்துதல், விக்கிர வாண்டி பேரூராட்சியில் 5 லட்சம் கொள்ளளவுள்ள நீர்தேக்க தொட்டி புதிதாக கட்டுதல், விக்கிரவாண்டியில் நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு, தாசில்தார் குடியிருப்பு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விடுதி கட்டிடம் உள்ளிட்டவைக்கு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். அப்போது லட்சுமணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டுராஜா, முருகன், ஜெயபால், வேம்பி ரவி, ரவிதுரை, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், நகர செயலாளர்கள் விக்கிரவாண்டி நைனாமுகமது, வளவனூர் ஜீவா உள்பட பலர் உடனிருந்தனர்.