திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை - 4 பேர் கைது
|ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் சரத்குமார் (வயது 20). இவருக்கு 5 மாதத்திற்கு முன்பு திவ்யா என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சரத் குமார் தனது மாமனார் உடன் ஐபேடு என்ற கிராமத்திற்கு இறைச்சி வாங்க சென்றார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் இவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சரத்குமார் இறைச்சி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது ஐபேடு கிராமத்தை சேர்ந்த தாமோதரன்(24) , கோபி(24), துரைப்பாண்டி (23), அசோக்பாண்டியன்(24), குபேந்திரன், சதீஷ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை வழிமறித்து உருட்டு கட்டைகளால் சரமாறியாக தாக்கியது.
இதில் சரத்குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரத்குமாரின் தம்பி பரத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரத்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்பாண்டியன், துரைப்பாண்டி, தாமோதரன், கோபி ஆகியோரை கைது செய்தனர்.