புதுக்கோட்டை
கோல்களை முன்கூட்டியே கணித்த புதுக்கோட்டை விமானி
|உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான கோல்களை புதுக்கோட்டை விமானி முன்கூட்டியே கணித்தார்.
கத்தாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிபோட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. பரப்பான இறுதிப்போட்டியை உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் பார்த்து உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் மைதானத்தில் கோல்கள் எந்த நேரத்தில் அடிக்கப்படும் என்பதை புதுக்கோட்டையை சேர்ந்த விமானியான கணேஷ்குமார் முன்கூட்டியே கணித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது போட்டி தொடங்கும் முன்பு 40 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு பதிவிட்டார். அதில் இந்திய நேரப்படி 20.48-20.55-க்குள் முதல் கோல் விழும் எனவும், 21.06-21.08 மணிக்குள் 2-வது கோல் விழும் என்றும் கணித்து பதிவிட்டுள்ளார். அதன்படியே 20.53 மணிக்கு முதல் கோலும், 21.06 மணிக்கு 2-வது கோலும் விழுந்துள்ளது.
உலகமே உற்றுநோக்கிய போட்டியை முன்கூட்டியே கணித்து வெளியிட்ட கணேஷ்குமாரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரை பாராட்டி பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தமிழரின் வானியல் ஜோதிட முறையை கற்றுள்ளேன். கடந்த 27 ஆண்டுகளாக இதனை பயின்ற அனுபவம் உள்ளது. இதற்கு முன்பு நிலநடுக்கம், கொரோனா மரணம், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் எழும் பிரச்சினைகள் குறித்தும் முன்கூட்டியே கணித்து தெரிவித்துள்ளேன். இது நிரூபிக்கப்பட்டுள்ளதை நான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறேன் என்றார். இவருக்கு 44 வயதாகிறது. விமானியாக இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறார். இதனால் 6 மாதம் வெளிநாடு, 6 மாதம் புதுக்கோட்டை என வசித்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் இருக்கும்போது கணிப்புகளை முகநூலில் தொடர்ந்து பதிவிட்டதாகவும் கூறினார்.