புதுக்கோட்டை
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும்
|புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மதியழகன், முத்தையா, சுப்பையா, செல்வராணி கணேசன், ராஜா, சவரிநாதன், சந்திரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரோகையா, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் செப்டம்பர் 15-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் திறந்த வெளி மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் பங்கேற்பது. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்திடும் வகையில் செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை துரிதப்படுத்தி வருகிற 27-ந் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று கழக பொது செயலாளரிடம் வழங்குவது. 6 சட்டமன்ற தொகுதி கொண்ட புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வரவேண்டும். காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரைவாக மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு உதவிட ஷேர் ஆட்டோக்களை இயக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சிற்றரசு, அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர் அரங்க நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.