புதுக்கோட்டை
புதுக்கோட்டை வீரர், வீராங்கனைகள் 14 பதக்கங்கள் பெற்றனர்
|புதுக்கோட்டை வீரர், வீராங்கனைகள் 14 பதக்கங்கள் பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவு ஆண்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையினை வென்றுள்ளனர். இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிலம்பம் பள்ளி பிரிவில் மான் கொம்பு வீச்சில் கிருஷ்ணன் வெண்கல பதக்கமும், கல்லூரி பிரிவில் இரட்டைக் கம்பு வீச்சில் பிரியதர்ஷினி வெள்ளியும், மான் கொம்பு வீச்சில் ரங்கசாமி வெண்கலமும், கம்பு வீச்சு மற்றும் அலங்கார வீச்சில் கீர்த்தனா வெண்கலமும், பொதுப்பிரிவில் மான் கொம்பு வீச்சில் ராஜா வெள்ளியும், இரட்டை கம்பு வீச்சில் கார்த்திகேயன் வெண்கல பதக்கமும் வென்றனர். மேலும், பளுதூக்குதல் போட்டிகளில் பள்ளி பிரிவில் விஸ்வநாதன் தங்கப்பதக்கமும், கல்லூரி பிரிவில் பிரியா வெள்ளியும், சண்முகப்பிரியா வெண்கல பதக்கமும் வென்றனர். தடகளம் கல்லூரி பிரிவில் 1,500 மீட்டர் ஓட்ட போட்டிகளில் லாவண்யா வெள்ளியும், வட்டு எறிதலில் கோகுல் வெண்கல பதக்கமும் வென்றனர். பொதுப்பிரிவு தடகளம் 3,000 மீட்டர் ஓட்ட போட்டிகளில் லட்சுமணன் தங்க பதக்கம் வென்றார். இறகு பந்து இரட்டையர் பள்ளிப் பிரிவில் ராகுல் மற்றும் தவுபீக் வெள்ளி பதக்கம் வென்றனர். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் மொத்தம் 14 பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் கலெக்டர் மெர்சி ரம்யாவை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.