< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் படிக்கும் 15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை - ஒருவர் பலியானதால் அதிர்ச்சி
மாநில செய்திகள்

புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் படிக்கும் 15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை - ஒருவர் பலியானதால் அதிர்ச்சி

தினத்தந்தி
|
11 July 2024 10:29 AM IST

சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் 15-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வயலோகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த தர்மேந்திரன் மகன் நித்திஷ்வரன் (வயது 7) என்பவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அதே பள்ளியை சேர்ந்த முகேஸ்சித்திக் (7), நிஷாந்திகா (9), இயமாளினி (4), சித்தார்த் (7), தன்வீகாஸ்ரீ (7), சர்மிளா (10), தியா (4), லோகித் (8), யோகேஷ் (8), அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மதுமிதா (14), மாதேஷ் (11), கருப்பையா (17), விசாலி (17) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் பலருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபிராமசுந்தரி, வெங்கடேசபிரபு ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பது, கழிவுநீர் கால்வாய் இல்லாமல் இருப்பது, ஒரே குடிநீர் தொட்டியில் உள்ளூர் தண்ணீர் மற்றும் காவிரி தண்ணீரை மாற்றி மாற்றி வழங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தெருக்கள், குடிநீர் தொட்டிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஒரே கிராமத்தில் இரு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்போவதாக கூறினர்.

மேலும் செய்திகள்