பா.ஜ.க.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யுங்கள்; தொண்டர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
|பா.ஜ.க.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்ப திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பேரறிஞர் அண்ணா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில், நம்முடைய கொள்கைகளை பரப்ப, பேச்சு மேடை - நாடக மேடை - திரையுலகம் எழுத்துலகம் என்று மக்களை சென்று அடைவதற்கான அனைத்து 'மீடிய'த்தையும் பயன்படுத்திக்கொண்டோம். பாட்டு, கவிதை, கதை, நாவல், திரைப்படம், நாடகம், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று எவ்வாறெல்லாம் மக்களிடம் பேச முடியுமோ, அவ்வாறெல்லாம் பேசினோம். 'முரசொலி பொங்கல் மலர்' எல்லாம் பார்த்தீர்கள் என்றால், பொக்கிஷம் மாதிரி இருக்கும். அவ்வளவு கருத்துகள் நிறைந்திருக்கும்.
தி.மு.க.காரன் எந்தளவிற்கு கொள்கை வெறியுள்ளவன் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை, பேரறிஞர் அண்ணா, ஒரு தொண்டருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார், ஆனால் அந்த தொண்டர், தனக்கு அந்த பொறுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 'என்ன காரணம்?' என்று அண்ணா கேட்டார். ''எனக்கு வசதி இல்லை, ஏழை'' என்று அந்தத் தொண்டர் சொன்னார். அவருடைய தயக்கத்தைப் புரிந்துகொண்ட அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?.
லட்சியம்
''உன் ஊரில் கரிக்கட்டை இருக்கும் அல்லவா. அதை வைத்து 'உதயசூரியன்' சின்னத்தை வரை அதுதான் சிறந்த இயக்கப் பணி!'' என்று சொன்னார். மிக மிக சாதரணமானவர்கள் சேர்ந்து உருவாக்கிய இயக்கம் இது. இங்கு எல்லோருக்கும் வசதி வாய்ப்பு இல்லை. ஆனால் தி.மு.க.வில் எல்லோருக்கும் அறிவார்ந்த கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையை அடைய வேண்டும் என்று லட்சியம் இருக்கிறது. அதுதான் நம்முடைய பலம். அதைத்தான் பேரறிஞர் அண்ணா அந்தத் தொண்டருக்குப் புரிய வைத்தார்.
ஒரு சாதாரண கரிக்கட்டையைக் கூட கருத்தியல் ஆயுதமாகப் பயன்படுத்தகொள்ளத் தெரிந்தவன் தி.மு.க.காரன். அதனால் தான், சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான தி.மு.க. கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பெரிய, பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை, நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான்.
வெற்றி பெறுவோம்
பேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் -எக்ஸ் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது எல்லாவற்றையும் நம் கொள்கைகளை கொண்டு செல்ல கட்சியை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய சாதனைகளை சொல்ல வேண்டும். அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். இதையெல்லாம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இதை கவனத்தில் வைத்து செயல்படுங்கள்.
என்னடா இது!? இவர்கள் தமிழ்நாட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், இந்தி பேசும் மாநிலத்திற்கும் வந்துவிட்டார்கள்'' என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான என்னுடைய பிரசாரத்தை நான் தொடங்கி விட்டேன், நாம் சேர்ந்து முன்னெடுப்போம்! வெற்றி பெறுவோம்.
அதிகமாக பரப்புங்கள்
இந்தியாவுக்காகப் பேசுவோம் - தொகுப்பு 1 மற்றும் 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம். கள்ளக்கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு.
ஆனால், நம்முடைய கொள்கைகளுக்கு வலிமை அதிகம். 'ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூபாய் 15 லட்சம் கொடுப்போம்' என்று பிரதமர் மோடி சொன்னதையும் 'அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா என்று உள்துறை மந்திரி அமித்ஷா சொன்னதையும் அதிகமாக பரப்புங்கள்.
பா.ஜ.க.வின் கடந்த காலத் தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்யுங்கள். இதைச் சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும். நாடும் நமதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.