அரியலூர்
வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு
|வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2,54,684 வாக்காளர்களும், 303 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2,52,401 வாக்காளர்களும், 290 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லாததால், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் எந்த ஒரு புதிய வாக்குச்சாவடி மையங்களும் உருவாக்கப்படவில்லை. அரியலூர் தொகுதியில், வாக்குச்சாவடி அமைவிடம், கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 5 வாக்குச்சாவடிகளும், பெயர் மாற்றம் பிரிவின் கீழ் 3 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் தொகுதியில் வாக்குச்சாவடி பெயர் மாற்றம் பிரிவில் 20 வாக்குச்சாவடி மையங்களும், வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிட மாற்றம் பிரிவின் கீழ் 1 வாக்குச்சாவடியும் என அரியலூர் மாவட்டத்திற்கு மொத்தம் 29 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைக்கப்பட, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
மேற்படி மறுசீரமைக்கப்பட உள்ள வரைவு வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஆட்சேபனை அல்லது கருத்து ஏதேனும் இருப்பின் அது குறித்து ஒரு வார காலத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார்களிடமோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.