< Back
மாநில செய்திகள்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு
மாநில செய்திகள்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

தினத்தந்தி
|
28 Feb 2024 11:59 AM IST

விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எதிரணிக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி திடீரென பா.ஜனதாவில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி.

இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும், விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு-க்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக அப்பாவு அறிவித்தார்.

இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24-ம் தேதி முதல் தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்