< Back
மாநில செய்திகள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

மகாளய அமாவாசையையொட்டி பூம்புகார், காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்

திருவெண்காடு:

பூம்புகார் சங்கமத்துறை

முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் தலையாய கடமையாகும். நவீன உலகத்தில் மாதம்தோறும் அமாவாசை அன்று வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம். அதிலும் புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரும் 15 நாட்கள் அல்லது அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் மூதாதையர் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் திரளான பக்தர்கள் புனித நீராடி தங்களுடைய மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும் சுமங்கலி பெண்கள் காவிரியில் மங்களப் பொருட்களை படையல் செய்து காவிரி அம்மனை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். மேலும் காவிரி சங்கமத் துறைக்கு செல்லும் பாதையில் படர்ந்து இருந்த கருவேல மரங்களை இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஏற்பாட்டில் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றியிருந்தனர். இதனால் பக்தர்கள் அச்சமின்றி காவிரி சங்கமத் துறைக்கு நடந்து சென்றதுடன் இன்ஸ்பெக்டருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

துலாக்கட்டத்தில் பொதுமக்கள் வருகை குறைவு

மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு அமைந்துள்ளது. இந்த மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலாக்கட்டம் பகுதியில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆற்றின் நடுவே 16 தீர்த்த கிணறுகள் உள்ளன. இத்தகைய காவிரி துலாக்கட்டத்தில் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை நகரம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களாக காவிரியில் தண்ணீர் வராததால் புகழ் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாளய அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க குறைந்த அளவே பொதுமக்கள் வந்தனர். ஆற்றில் நீர் இல்லாததால் வீடுகளிலேயே குளித்துவிட்டு காவிரி கரைக்கு வந்த பொதுமக்கள் காவிரியில் தண்ணீர் இல்லாமல் பூஜைகள் செய்த பிண்டங்களை கரைக்க முடியாமல் ஆற்றிலுள்ள 16க்கு கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பிண்டங்களை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் செய்திகள்