விருதுநகர்
ரெயில்வே அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
|அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட 5 தாலுகா மக்கள் பயன்பெறுவார்கள்.
சிவகாசி
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட 5 தாலுகா மக்கள் பயன்பெறுவார்கள்.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ்
தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்று அடையும் வகையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதே போல் நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்படி முதலில் அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது சாத்தூர் ரெயில் நிலையத்திலும் அந்தியோதயா ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ரெயில் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
ஆன்மிக சுற்றுலா
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக சென்னைக்கு செல்ல குறைந்த அளவிலான ரெயில் வசதி உள்ள நிலையில் தற்போது அந்தியோதயா எக்ஸ்பிரஸ் சாத்தூரில் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ரெயிலில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பயணிகள் சாத்தூர் வரை வந்து அங்கிருந்து பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும்.
இந்த ரெயில் சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக வருவதால் இப்பகுதி மக்கள் ஆன்மிக சுற்றுலா செல்லவும் இந்த ரெயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.