< Back
மாநில செய்திகள்
மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
19 Aug 2022 9:43 AM IST

மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ரூ.3,220 கோடி செலவில் கொசஸ்தலை வடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு வடிகால் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

திருவொற்றியூர் மண்டலம் 4-வது வார்டு எர்ணீஸ்வரர் கோவில் 4-வது தெருவில் 30 மீட்டர் தூரத்துக்கான பணி தொடங்கியது. இதனால் அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்ற கேபிள்கள் அறுக்கப்பட்டதுடன், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளும் சேதப்படுத்தப்பட்டு விட்டன. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததுடன், கடந்த 3 மாதமாக வேலை செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் இந்த மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அப்பகுதியில் நடுத்தெருவில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை அழைத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து மீண்டும் பணி தொடங்கியதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்