சென்னை
ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
|ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரெயில்வே கடவுப்பாதை இருந்தது. இதன் அருகே 3 உயர் நிலைப்பள்ளிகள் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூருக்கு சென்று வர இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர்.
ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக 2001-ம் ஆண்டு இந்த ரெயில்வே கடவுப்பாதை மூடப்பட்டது. இதனால் கடவுப்பாதை அருகில் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இதற்கிடையில் கடவுப்பாதை மூடப்பட்ட பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 2011-ம் ஆண்டு ரூ.2 கோடியே 29 லட்சத்தை ரெயில்வே துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதன்பிறகு நடந்த ஆய்வில் ஆலந்தூரில் இருந்து ஆதம்பாக்கத்துக்கு பாதாள சாக்கடைக்கு முக்கிய குழாய் செல்வதால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடியாது என அந்த திட்டம் கைவிடப்பட்டது.
சுரங்கப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடக்கும் வகையில் அந்த இடத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. அதற்கான எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை.
ரெயில்வே கடவுப்பாதை மூடப்பட்ட நிலையில் அந்த பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். இதனால் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். இதையடுத்து தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதை தடுக்க ஆலந்தூர் பகுதியில் தடுப்பு சுவரும், ஆதம்பாக்கம் பகுதியில் இரும்பு கேட்டும் அமைக்கப்பட்டது.
ஆனால் ஆதம்பாக்கம் பகுதியில் தண்டவாளத்துக்கு செல்ல சிறு பாதை உள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ஒதுக்கிய நிதியில் இப்பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ரெயில்வே நடைமேம்பாலத்துக்காக 21 ஆண்டுகளாக காத்திருக்கும் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், நடைமேம்பாலம் அமைக்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றி வைப்பார்களா?.