பொதுமக்கள் பார்வையிட அனுமதி: கிண்டி கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு
|சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை,
நவராத்திரி விழாவையொட்டி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் 5 படிகளில் விநாயகர், பார்வதிதேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, தசாவதாரம், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், நடராஜர், துர்க்கை, கருப்பசாமி உள்ளிட்ட சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. இதை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவருடைய மனைவி லட்சுமி ரவி, குத்துவிளக்கு ஏற்றினார்.
பொதுமக்கள் பார்வையிட அனுமதி
நிகழ்ச்சியில் கர்நாடக, இன்னிசைக் கச்சேரிகள், துர்கா நடனம் நடந்தன. கவர்னரின் செயலாளர் கிர்லோஷ்குமார் மற்றும் கல்வியாளர்கள், டாக்டர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். முன்னதாக பார்வையாளர்கள் அமர்ந்த பகுதிகளுக்கு கவர்னரும், அவருடைய மனைவியும் நேரடியாக சென்று அனைவரையும் வரவேற்றனர்.
இதுகுறித்து கிண்டி ராஜ்பவன் அதிகாரிகள் கூறும்போது, 'நவராத்திரி விழா இன்று (நேற்று) தொடங்கி வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் தினசரி மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை ஒரு மணிநேரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நவராத்திரி கொலுவை தினசரி மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்' என்றனர்.