புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - காவல்துறை வேண்டுகோள்
|புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
சென்னை,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் படி (31.12.2023) இன்று இரவு முதல் (01.01.2024) காலை வரை தமிழ்நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படவுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், அதிக சத்தத்துடன் வாகனம் ஓட்டுவோர் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி பெற்றவர்கள் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நேர அளவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் கூடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், கடை வீதிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்தல் ஆகிய பணிகளில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.