தேனி
மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
|மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மயிலாடும்பாறை அருகே நேருஜிநகர் விலக்கில் இருந்து சிறப்பாறை வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலையில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சிறப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முருங்கை, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலையால் இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு உரிய நேரத்திற்கு கொண்டு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சிறப்பாறை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.