< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
நாமக்கல்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
30 Nov 2022 1:15 AM IST

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இலவச வீட்டுமனை பட்டா

நாமக்கல் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் 461 குடும்பங்களை சேர்ந்தவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு நிறுவனர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதால், வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை புகார் மனு அளித்து உள்ளோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

இலங்கை அகதிகள் முகாம்

எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 30 வீடுகள் உள்ளன. இங்குள்ள 10 வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இணைப்பு துண்டிப்பு கைவிடப்பட்டு மின் வாரிய ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் எருமப்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்கள் பள்ளி குழந்தைகளுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதியில் புதிதாக மின் இணைப்பு வழங்கியபின் பழைய மின் இணைப்பை துண்டித்துக் கொள்ளலாம். எங்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

புதிய கட்டிடங்களுக்கு நிரந்தர மின்இணைப்பு

நாமக்கல் பில்டிங் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் நகரில் வழக்கமாக இருக்கும் நடைமுறைகளை பின்பற்றி கட்டிடங்களை அடுக்குமாடியாக கட்டினோம். மாறாக ஒவ்வொரு விதிமீறிய கட்டிடத்துக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதை நாங்கள் செலுத்திவிட்டோம். எங்களுக்கு கதவு எண், குடிநீர் இணைப்பு கொடுத்தனர். நாங்களும் வீட்டு வரியை முறையாக செலுத்தி வருகிறோம். கட்டிடம் கட்ட தற்காலிக மின் இணைப்பு பெற்றபோது, மின்வாரியம் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. இந்த நிலையில் விதிமீறி கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் என கூறி கட்டிட முடிவு சான்றுகள் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுக்கிறது. கட்டிட முடிவு சான்றுகள் இல்லாமல், நிரந்தர மின் இணைப்பு பெற முடியாமல் பொருளதார இழப்பை சந்தித்து வருகிறோம். நகராட்சி நிர்வாகம், கட்டிட முடிவு சான்றுகள் வழங்க வேண்டும். மின்வாரியமும் எங்களின் விதிமுறைகளின் அறியாமையை உணர்ந்து, நிரந்தர மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

முனியப்பசாமி சிலை கடத்தல்

மோகனூர் அருகே ஓலப்பாளையம் கூடுதுறையை சேர்ந்த கிராம மக்கள், கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது :-

மோகனூர் ஒன்றியம் புன்செய் இடையாறு கீழ்முகம் கிராமம் கூடுதுறை முனியப்பன் நகரில் முனியப்பன் சாமி சிலையை 200 ஆண்டுகளுக்கும் மேல் அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வருகின்றனர்.் கடந்த 18-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் முனியப்ப சாமி சிலையை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து ஆண்டு மார்கழி மாதம் திருவிழா நடத்துவதற்கு முனியப்ப சாமி சிலை எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிலையை கடத்தி சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்