சென்னை
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு வீடுதோறும் வரும் களஆய்வு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
|டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு வீடுதோறும் களஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ழுழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையினால் ஏற்படும் தொற்றுநோய் ஆகியவை பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சுகாதாரப்பணிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பட்டினப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கொசுப்புகை மருந்து அடித்தல் மற்றும் கொசுப்புழு கொல்லி மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பட்டினம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி வைத்து, பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டினப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள 24 ஏக்கர் பரப்பளவிலான காலிமனையில் பொதுமக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் அடர்ந்திருந்த புதர்செடிகள் ஆகியவற்றை தீவிர தூய்மை பணியின் மூலம், ஜே.சி.பி., மர அறுவை எந்திரங்கள் உள்ளிட்ட எந்திரங்களைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டது.
பருவமழை காலம் என்பதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் அவற்றை உடனடியாக அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கிணறு, மேல்நிலைத்தொட்டி, தண்ணீர் தொட்டி போன்றவற்றை கொசுப்புழுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்., பொதுமக்கள் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு, வீடுகள் தோறும் களஆய்வு மேற்கொள்ள வரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கமிஷனர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, த.வேலு எம்.எல்.ஏ., கவுன்சிலர் செல்வி அமிர்தவர்ஷினி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகரீசன் மற்றும் மண்டல அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.