கள்ளக்குறிச்சி
பொதுமக்கள் சாலை மறியல்
|சங்கராபுரம் அருகே சீராக மின்வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம்
குறைந்த மின்அழுத்தம்
சங்கராபுரம் அருகே ச.செல்லம்பட்டு கிராமத்தில், நான்குமுனை சந்திப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில மாதங்களாக குறைந்த மின்அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும், சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக்காற்றால் இரவில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீராக மின்வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை 7 மணி அளவில் அதே பகுதியில் சங்கராபுரம்- -கச்சிராயப்பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகிராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, இன்னும் 4 நாட்களில் சீராக மின்வினியோகம் செய்யப்படும் என்று கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.